திருத்துறைப்பூண்டி, நவம்பர் 19
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கோமள பேட்டைகிராமத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடையில், பிரபல உர நிறுவனத்தின் பெயரில் போலி டிஏபி (DAP) உரம் விற்கப்படுவதாகவேளாண்மைத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவாரூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தலைமையிலான குழு கடையில் திடீர் சோதனை நடத்தியது. அப்போது 170 மூட்டைகள் — மொத்தம் 8.850 மெட்ரிக் டன் அளவிலான டிஏபி உரம் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கடையில் கிடைத்த உர மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கை வரும் வரை, உரக்கடையில் உரம் மற்றும் வேளாண் உள்ளீடுகள் விற்பனை செய்ய தடை விதித்து, கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மேலும், இது போலி உரம் என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், கடை உரிமையாளருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடை நிரந்தரமாக மூடப்படும் என்றும் திருவாரூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment